1
பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே: எக்காளம் முழங்குவது போல் உன் குரலை உயர்த்து: என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.
2
அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்: என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்: நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்: கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.
3
“நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்: உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.