6
ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.
7
நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்: ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.
8
பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்: ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.
9
எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது: நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்: அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
10
மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது: என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.
11
துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.
12
உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.
13
உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்: உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.
14
நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்: ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்: நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.