1
விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.
2
சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
3
ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்: பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
4
ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்: அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.
5
இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத்தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்: அவர்களை ஆளுவோர் நற்பெருமை பேசுகின்றனர்: எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகின்றது, என்கிறார் ஆண்டவர்.