1
என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்: என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்: செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
2
அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைத்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்: திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்: நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்: மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது.
3
இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்: எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.
4
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?
5
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: “நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்: அது தீக்கிரையாகும்: அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்: அது மிதியுண்டு போகும்.
6
நான் அதைப் பாழாக்கி விடுவேன்: அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை: களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை: நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்: அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”
7
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே: அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே: நீதிக்கனி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்: ஆனால் விளைந்தோ இரத்தப்பழி: நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்: ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
8
வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும் தனித்து”நாட்டில் வாழ்வீர்களோ?