1
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்: பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்: கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்: அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்: அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:
2
நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்: செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.
3
இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்: பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.
4
என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.
5
நானே ஆண்டவர்: வேறு எவருமில்லை: என்னையன்றி வேறு கடவுள் இல்லை: நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.