ஏசாயா 44:13-19 - WCV
13
தச்சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்: அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.
14
அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்: அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்: அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.
15
அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது: அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.
16
அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்: அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்: இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்: பின்னர் குளிர் காய்ந்து, “வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!” என்று சொல்லிக் கொள்கிறான்.
17
எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி “நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்” என்று மன்றாடுகிறான்.
18
அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.
19
அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை: அவர்களுக்கு அறிவுமில்லை: “அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்: அதன் நெருப்புத்தணலில் அப்பம் சுட்டேன்: இறைச்சியைப் பொரித்து உண்டேன்: எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?” என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.