1
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.
2
அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார்.
3
நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.
4
உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
5
விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
6
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.
7
பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
8
நானே ஆண்டவர்: அதுவே என் பெயர்: என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.
9
முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன: புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்: அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்: கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.
11
பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்: சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்: மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.
12
அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்: அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.