21
உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
22
உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே: மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்: வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.
23
ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே: மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.
24
அவர்கள் நடப்படுகிறார்கள்: விதைக்கப்படுகிறார்கள்: ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது.
25
“யாருக்கு என்னை ஒப்பிடுடவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?” என்கிறார் தூயவர்.
26
உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்: அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.