ஏசாயா 40:19-31 - WCV
19
சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்: பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்: வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான்.
20
இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவயன் உளுத்துப்போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்: அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான்.
21
உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
22
உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே: மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்: வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.
23
ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே: மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.
24
அவர்கள் நடப்படுகிறார்கள்: விதைக்கப்படுகிறார்கள்: ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது.
25
“யாருக்கு என்னை ஒப்பிடுடவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?” என்கிறார் தூயவர்.
26
உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்: அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.
27
“என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது: என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ செல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?
28
உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்: அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்: அவர் சோர்ந்து போகார்: களைப்படையார்: அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.
29
அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்: வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.
30
இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்: வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.
31
ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார்.