ஏசாயா 38:9-22 - WCV
9
யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்:
10
'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன்.
11
'வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன்.
12
என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்: காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்,
13
துணை வேண்டிக் காலைவரை கதறினேன்: சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்: காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.
14
சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்: மாடப்புறாப்போல் விம்முகிறேன்: மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன: என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்: எனக்குத் துணையாய் இரும்.
15
நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்: மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.
16
என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்: என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது: எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.
17
இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்: மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்: என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.
18
பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது: சாவு உம்மைப் புகழந்து ஏத்தாது: பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!
19
நான் இன்று உம்மைப் புகழ்ந்து போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.
20
ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்: ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.
21
“எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார்.
22
ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.