ஏசாயா 32:9-14 - WCV
9
பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து என் குரலுக்குச் செவிகொடுங்கள்: கவலையற்ற புதல்வியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்.
10
கவலையற்ற பெண்களே, ஓராண்டும் சில நாள்களும் சென்றபின் நீங்கள் நடுநடுங்குவீர்கள். ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்: கனிகொய்யுங் காலம் இனி வராது.
11
பகட்டாக வாழும் மங்கையரே, அஞ்சி நடுங்குங்கள்: கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்: உடைகளை உரிந்து, களைந்து இடையில் சாக்கு உடையைக் கட்டிக் கொள்ளுங்கள்.
12
செழுமையான வயல்களைக் குறித்தும் வளமான திராட்சைத் தோட்டத்தை முன்னிட்டும் மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.
13
முட்களும் முட்புதர்களும் ஓங்கி வளர்ந்துள்ள என் மக்களின் நிலத்திற்காகவும் களிப்புமிகு நகரில் உள்ள மகிழ்ச்சி நிறை இல்லங்கள் அனைத்திற்காகவும் அழுங்கள்.
14
அரண்மனை பாழடையுமாறு விடப்படும்: ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்: குன்றும் காவல் மாடமும் என்றுமுள குகைகளாகும்: அங்குக் காட்டுக் கழுதைகள் களிப்படையும்: மந்தைகள் மேயும்.