1
படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்: யூதாவின் நலத்தை நலியச் செய்வார்: ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.
2
வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.
3
ஐம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.
4
சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்: பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள்.
5
மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்: எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்: இளைஞர் முதியோரை அவமதிப்பர்: கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர்.
6
தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், “நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்: நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக: பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக” என்பான்.
7
அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல: இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை: மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்” எனச் சொல்லி மறுத்துவிடுவான்.
8
எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது: யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது: ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன: மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின.