ஏசாயா 29:14-19 - WCV
14
ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்: அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.
15
ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, “நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?” எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!
16
நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன? குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ? கைவேலை தன் கைவினைஞனை நோக்கி, “நீர் என்னை உருவாக்கவில்லை” என்று கூறலாமோ? வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி “உமக்கு அறிவில்லை” என்று சொல்லலாமோ?
17
இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம் மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ?
18
அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்: பார்வையற்றோரின் கண்கள் காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.
19
ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்: மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.