ஏசாயா 29:1-9 - WCV
1
தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்! அரியேல்! உனக்கு ஐயோ கேடு! ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்: விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும்.
2
அரியேலுக்கு நான் இடுக்கண் விளைவிப்பேன்: அங்கு அழுகையும் புலம்பலும் நிறைந்திருக்கும்: அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.
3
உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்: உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்: உனக்கெதிராய் முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.
4
தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்: நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்: உன் குரல், இறந்தவன் ஆவியின் ஒலிபோல, மண்ணிலிருந்து வெளிவரும்:, உன் பேச்சு புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.
5
உன் பகைவனின் திரள் நுண்ணிய தூசிபோல் இருக்கும்: கொடியவர் கூட்டம்”பறக்கும் பதர் போலிருக்கும்: இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.
6
இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல், சூறாவளி, புயல்காற்று விழுங்கும் நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால் படைகளின் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.
7
அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப் போரிட்டு அதைத் துன்புறுத்திய அனைவரும் கனவு போலும், கனவில் காணும் காட்சிபோலும் மறைவர்.
8
பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.
9
திகிலடையுங்கள்: திகைத்து நில்லுங்கள்: குருடரைப்போல் இருங்கள்: பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்ததால் அல்ல: தடுமாறுங்கள்: ஆனால் மதுவால் அல்ல.