ஏசாயா 2:12-22 - WCV
12
படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது: அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்: உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை அனைத்தும் நலிவடையும்.
13
அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும் பாசானில் உள்ள அனைத்துக் கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.
14
வானளாவிய மலைகள், உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.
15
உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்: வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும்.
16
தர்சீசின் மரக்கலங்கள் யாவும் அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும்.
17
மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்: அவர்தம் செருக்கு அகற்றப்படும்: ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில் உன்னதமானவராயிருப்பார்:
18
சிலைகள் அனைத்தும் ஒருங்கே ஒழிக்கப்படும்.
19
ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்: மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர்.
20
அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய வெள்ளிச் சிலைகளையும், பொற்பதுமைகளையும், அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.
21
ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்: குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர்.
22
நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்: அவர்களின் உயிர் நிலையற்றது: ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன?