ஏசாயா 19:18-23 - WCV
18
அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்: அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று “கதிரவன் நகரம்” என்று அழைக்கப்படும்.
19
அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்: அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒன்று எழுப்பப்படும்.
20
எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.
21
அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்: எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்: பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்: ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.
22
ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்: வதைத்துக் குணமாக்குவார்: அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்: அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார்.
23
அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்: எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள்.