1
எகிப்தைக் குறித்த திருவாக்கு: விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்: எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்: எகிப்தியரின் உள்மனமோ உருக்குலையும்.
2
எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே நான் கிளர்ந்தெழச் செய்வேன். அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக உடன்பிறப்பும் நண்பனுக்கு எதிராக நண்பனும் ஒரு நகரத்தாருக்கு எதிராக மற்றொரு நகரத்தாரும் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும் மோதிக்கொள்வர்.
3
ஆதலால், எகிப்தியர்கள் தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்: அவர்கள் திட்டங்களைக் குழப்பி விடுவேன்: அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர், மைவித்தைக்காரர், குறிசொல்வோர் ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள்.
4
கடினமனம் கொண்ட அதிகாரிகளின் கைகளில் எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன். கொடுங்கோல் மன்னன் ஒருவன் அவர்களை ஆள்வான், என்கிறார் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
5
கடல் நீர் வற்றிப்போகும்: பேராறு காய்ந்து வறண்டு போகும்:
6
அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்: எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில் நீர் குறைந்து, வறண்டு போகும்: கோரைகளும் நாணல்களும் மக்கிப் போகும்.
7
ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும் உலர்ந்த தரையாகும்: நைல் நதியின் அருகில் விதைத்த யாவும் தீய்ந்து, பறந்து இல்லாது போகும்.
8
மீனவர்கள் புலம்புவர்: பேராற்றில் தூண்டில் போடுவோர் அனைவரும் அழுவர்: நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர்.
9
மெல்லிய சணலாடை செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெய்வோரும் வெட்கி நாணுவர்.
10
நாட்டின் தூண்களாய் இருப்போர் நசுக்கப்படுவர்: வேலைக்கு அமர்த்தப்படுவோர் உள்ளம் பதறுவர்.
11
சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்: “நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?
12
அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும்.
13
சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்: நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்: எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள்.
14
ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்: போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள்.
15
எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ, நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது.