4
பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு: “ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே!
5
தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார்.
6
அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்: பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள்.
7
மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது: மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது.
8
தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன: 'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை' எனப் பாடுகின்றன.
9
நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது: உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது.”
10
அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, “நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!
11
உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன: புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்!
12
வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!
13
'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்: இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்: வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.
14
மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!
15
ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்: படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!