ஏசாயா 13:1-14 - WCV
1
ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:
2
வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்: போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்: உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி, அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.
3
போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு, நானே ஆணை பிறப்பித்துள்ளேன்: நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட, தங்கள் வலிமையால் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன்.
4
மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்: அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவராம்: அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள், பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்:
5
தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும் அவர்கள் வருகின்றார்கள்: ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.
6
அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது:
7
ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்: மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும்.
8
அவர்கள் திகிலடைவார்கள்: துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்: பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்: ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்: கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும்.
9
இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது, கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது: மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது: அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது.
10
வானத்து விண்மீன்களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா: தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்: வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது.
11
உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்: ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்: அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன்.
12
மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன்.
13
ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்: மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்: படைகளின் ஆண்டவரது கோபத்தால் அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும்.
14
துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும், ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும், எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்: எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர்.