3
தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?
4
கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்: இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள். இதிலெல்லாம் ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை. ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.
5
அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது: தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.
6
இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்: எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்: அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன்.
7
அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு: மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்: பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.