4
ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது: அநீதி செய்வோரின் கூட்டம் இது: தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது: கேடுகெட்ட மக்கள் இவர்கள்: ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்: இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்: அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.
5
நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்: இதயமெல்லாம் தளர்ச்சி.
6
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை: ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், கீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன: அங்கே கீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.