12
நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?
13
இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்: நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது: நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன்.
14
உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது: அவை என் மேல் விழுந்த சுமையாயின: அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.
15
என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்: நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை: உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.
16
உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்: உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்: தீமை செய்தலை விட்டொழியுங்கள்:
17
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்: நீதியை நாடித் தேடுங்கள்: ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்: திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்: கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.
18
“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்: “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.
19
மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்: நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.
20
மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்: ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.