உன்னதப்பாட்டு 5:2-8 - WCV
2
நான் உறங்கினேன்: என் நெஞ்சமோ விழித்திருந்தது: இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்: “கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது: என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது, “
3
“என் ஆடையைக் களைந்து விட்டேன்: மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்: மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”
4
என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்: என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.
5
எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க: என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது: என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று: தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.
6
கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு: அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்: என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது: அவரைத் தேடினேன்: அவரைக் கண்டேன் அல்லேன்: அவரை அழைத்தேன்: பதிலே இல்லை!
7
ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்: அவர்கள் என்னை அடித்தனர்: காயப்படுத்தினர்: என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்: கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!
8
எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? “காதல் நோயுற்றேன் நான்” எனச் சொல்லுங்கள்.