1
இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்: என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்: தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்!
2
“எழுந்திடுவேன்: நகரத்தில் சுற்றிவருவேன்: தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்: தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!
3
ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.
4
அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்: விடவே இல்லை: என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்: என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.