13
நான் கண்ட வேறொன்றும் உண்டு: இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.
14
சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்: அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
15
அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.
16
வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது: அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.
17
மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன் முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவர் அடக்கமுடன் கூறுவதைக் கேட்பதே நன்று.
18
போர்க் கருவிகளைவிட ஞானமே சிறந்தது. ஆனால் ஒரே ஒரு தவறு நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.