பிரசங்கி 2:3-11 - WCV
3
இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்: மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்:
4
பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்: எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.
5
எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்:
6
தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்:
7
ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்: என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்: ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை.
8
வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.
9
இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை.
10
என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும்.
11
நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்: முற்றும் பயனற்ற செயல்களே.