15
உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி: உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு
16
உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
17
அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்: அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.
18
உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
19
அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்: அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!
20
மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? புரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
21
மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை: அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
22
பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்: தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.
23
கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்: தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.