நீதிமொழிகள் 4:10-23 - WCV
10
பிள்ளாய்! கவனி: நான் சொல்வதை ஏற்றுக்கொள்: அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11
ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்: நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12
நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது : நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13
பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்: அதை விட்டுவிடாதே: அதைக் கவனமாய்க் காத்துக்கொள்: அதுவே உனக்கு உயிர்.
14
பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே: தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15
அதன் அருகில் செல்லாதே: அதில் கால்வைக்காதே: அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16
தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது: யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது
17
தீவினையே அவர்கள் உண்ணும் உணவு: கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18
நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது: அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19
பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது: தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது
20
பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு: நான் சொல்வதைக் கவனி.
21
என் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்: உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22
அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்: அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23
விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.