10
திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது: அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.
11
அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்: அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.
12
அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்: ஒரு நாளும் தீங்கு நினையாள்.
13
கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்: தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
14
அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிடலாம்: அவள் உணவுப் பொருள்களைத் தொலையிலிருந்து வாங்கி வருவாள்.
15
வைகறையில் துயிலெழுவாள்: வீட்டாருக்கு உணவு சமைப்பாள்: வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.
16
ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்: தன் ஊதியத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.
17
சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்: அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.
18
தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்: அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.
19
இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்: நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.
20
எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
21
குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது: ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.
22
தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்: அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.
23
அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்: மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.
24
அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்: வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.
25
அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்: வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.
26
அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்: அன்போடு அநிவரை கூறுவாள்.
27
தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்: உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.
28
அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்: அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.
29
“திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு: அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.
30
எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.
31
அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்: அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.