1
பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
2
என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
3
ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
4
செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
5
அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
6
ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.