13
“நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியதாவது: நீங்கள் என் ஓய்வு நாள்களைக் கருத்தாய்க் கடைப்பிடியுங்கள்.ஆண்டவராகிய நானே உங்களைப் புனிதமாக்குகிறவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்படி அது எனக்கும் உங்களுக்கும் இடையில் உங்கள் தலைமுறைதோறும் ஓர் அடையாளமாக இருக்கும்.
14
ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள்.அது உங்களுக்குப் புனிதமானதாகும்.அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும்.அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
15
ஆறு நாள்கள் வேலை செய்யலாம்.ஏழாம் நாளோ ஓய்வு நாளாகியசாபாத்து.ஆண்டவருக்குப் புனிதமான நாள்.ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
16
இஸ்ரயேல் மக்கள் ஓய்வுநாளைக் கடைபிடிக்க வேண்டும்.என்றுமுள்ள உடன்படிக்கையாக விளங்கும்படி தலைமுறைதோறும் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும்.
17
இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம்.ஏனெனில் ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்” என்றார்.