1
மிதியானின் அர்ச்சகரும் மோசேயின் மாமனாருமாகிய இத்திரோ என்பவர் கடவுள் மோசேக்கும் அவர் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் செய்தது அனைத்தையும், ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்தினின்று வெளியேறச் செய்ததையும் கேள்வியுற்றார்.
2
மோசே முன்பு அனுப்பிவைத்திருந்த அவர் மனைவி சிப்போராவையும், இரு புதல்வர்களையும் அவர் மாமனாராகிய இத்திரோ அழைத்துக் கொண்டு வந்தார்.
3
அயல் நாட்டில் அன்னியனாக உள்ளேன்”என்ற பொருளில் ஒருவனுக்குக்கேர்சோம்”என்று மோசே பெயரிட்டிருந்தார்.
4
என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின்கடவுளே என் துணை”என்ற பொருளில்எலியேசர்”என்று மற்றவனுக்குப் பெயரிட்டிருந்தார்.
5
பாலை நிலத்தில் கடவுளின் மலை அருகில் மோசே பாளையம் இறங்கியிருக்க, அவருடைய மாமனாராகிய இத்திரோ மோசேயின் புதல்வரோடும் மனைவியோடும் அவரிடம் வந்தார்.
6
“உம் மாமன் இத்திரோ என்ற நான் உம் மனைவியோடும் இரு மைந்தரோடும் வந்திருக்கிறேன்” என மோசேக்குச் சொல்லியனுப்பினார்.
7
மோசேயும் தம் மாமனாரைச் சந்திக்க எதிர்கொண்டு வந்தார்: அவர்முன் தாழ்ந்து பணிந்தார்: அவரை முத்தமிட்டார்.இருவரும், ஒருவர் ஒருவரிடம் நலம் விசாரித்துக்கொண்டு, பாளையத்தில் புகுந்தனர்.
8
இஸ்ரயேலின் நலனை முன்னிட்டு ஆண்டவர் பார்வோனுக்கும் எகிப்திற்கும் செய்தது அனைத்தைப்பற்றியும், வழியில் தங்களுக்கு நேரிட்ட எல்லாத் தொல்லைகளைப் பற்றியும் ஆண்டவர் தங்களுக்கு விடுதலை அளித்தது பற்றியும் மோசே தம் மாமனாருக்கு விவரித்துச் சொன்னார்.
9
இஸ்ரயேலை எகிப்தின் பிடியினின்று விடுவிக்கையில், ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளைக்குறித்தும் இத்திரோ அகமகிழ்ந்தார்.
10
அப்போது இத்திரோ, “ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!. எகிப்தியர் பிடியினின்றும் பார்வோன் பிடியினின்றும் உங்களை விடுவித்தவர் அவரே.
11
அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயாந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன்.ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே” என்றுரைத்தார்.
12
மோசேயின் மாமனாராகிய இத்திரோ கடவுளுக்கு எரிபலியையும், பலிகளையும் செலுத்தினார். ஆரோனும் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களும் மோசேயின் மாமனாருடன் கடவுள் திருமுன் உணவருந்தச் சென்றனர்.