யாத்திராகமம் 16:4-15 - WCV
4
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும்.என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.
5
ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார்.
6
மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, “நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.
7
காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள்.ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார்.இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்”என்றனர்.
8
பின் மோசே, “ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார்.அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல: ஆண்டவருக்கே எதிரானவை” என்றார்.
9
மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்: ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார்.
10
அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள்.அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
11
ஆண்டவர் மோசேயை நோக்கி,
12
இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன்.நீ அவர்களிடம்,மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம்.காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்”என்று சொல்” என்றார்.
13
மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன.காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.
14
பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.
15
இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி மன்னா”என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை.அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே: