3
பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து, பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுவான்.
4
பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்: அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான்.அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன்.நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்” என்று கூறினார்.அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.
5
மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது.“நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?” என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.
6
எனவே அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
7
தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
8
ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்: அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான்.இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
9
பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கிருந்த அவர்களை நெருங்கினர்.