1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். ஆவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்: யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,
7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்: மலைகளே! ஒன்றுகூடுங்கள்:
9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்: பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்: மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.