யோபு 28:13-28 - WCV
13
மனிதர் அதன் மதிப்பை உணரார்: வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14
'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்: 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.
15
தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது: வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
16
ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17
பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா: பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18
மணியும் பவளமும் அதற்கு இணையில்லை: மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19
எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல: பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20
அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21
வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது: வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.
22
படுகுழியும் சாவும் பகர்கின்றன: அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது:
23
அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்: அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24
ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்: வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25
காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,
26
மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27
அவர் ஞானத்தைக் கண்டார்: அதைப்பற்றி அறிவித்தார்: அதை நிலைநாட்டினார்: இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28
அவர் மானிடர்க்குக் கூறினார்: ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்: அதுவே ஞானம்: தீமையை விட்டு விலகுங்கள்: அதுவே அறிவு.