யோபு 28:12-19 - WCV
12
ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13
மனிதர் அதன் மதிப்பை உணரார்: வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14
'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்: 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.
15
தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது: வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
16
ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17
பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா: பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18
மணியும் பவளமும் அதற்கு இணையில்லை: மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19
எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல: பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.