யோபு 26:5-14 - WCV
5
கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன: நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன.
6
பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது: படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.
7
வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்: காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.
8
நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்: அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.
9
தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்: முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.
10
நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து, இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார்.
11
விண்ணின் தூண்கள் அதிர்கின்றன: அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.
12
ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்: இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.
13
தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்: தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.
14
ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே! எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது. அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?