எஸ்தர் 3:8-13 - WCV
8
ஆமான் அகஸ்வேரிடம், “உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் நியமங்களின்படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.
9
இது மன்னருக்கு நலமெனப்பட்டால், அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நானூறு”டன்” வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன்” என்று கூறினான்.
10
அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.
11
மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்: உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய்” என்றார்.
12
உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்து அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.
13
அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.