6
அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.
7
மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.
8
கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.
9
யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார்.
10
ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.