நெகேமியா 2:12-20 - WCV
12
நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் தூண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை.
13
நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று 'நரி' நீருற்றைக் கடந்து, 'குப்பைமேட்டு' வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.
14
அங்கிருந்து 'ஊருணி வாயிலுக்கும்', 'அரசனின் குளத்திற்கும்' சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.
15
எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், “பள்ளத்தாக்கு வாயில்” வழியாகத் திரும்பி வந்தேன்.
16
நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.
17
பின்னர் நான் அவர்களைப் பார்த்து, “எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைச் கட்டியெழுப்புவோம், வாருங்கள்” என்று சொன்னேன்.
18
என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும்”வாரும் கட்டுவோம்” என்றனர்: நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.
19
ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். “நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டனர்.
20
நானோ அவர்களுக்கு மறுமொழியாக, “விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை” என்றேன்.