15
அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன். அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன்.
16
மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.
17
எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறுயது: “எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா?
18
உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார். இருப்பினும், ஒய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள். இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.
19
ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது,கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.
20
எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும் ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.
21
நான் அவர்களை எச்சரித்து, “என் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்”என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.
22
22””ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்: வாயிலைக் காக்க வாருங்கள்” என்று லேவியரிடம் கூறினேன். இதன் பொருட்டும் 'என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும். உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்'.