10
கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.
11
அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, “அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது” என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.
12
முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர்.
13
நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.