5
யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
6
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான்.
7
அத்துடன், ஆண்டவரின் இல்லத்துப் பாத்திரங்கள் சிலவற்றை நெபுகத்னேசர் பாபிலோனுக்கு எடுத்துச் சென்று, அங்கேயுள்ள தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான்.
8
யோயாக்கீமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும், அவனுக்கு எதிராய்க் காணப்பட்டவை யாவும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அவனுக்குப்பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.
9
யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு: எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
10
ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனதுபடையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்: பின்பு அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான்.