12
அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்: ஆண்டவர் பெயரால் பேசிய இறைவாக்கினர் எரேமியா முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளவில்லை.
13
கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து. இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
14
அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர்.
15
அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்.
16
ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது.
17
ஆதலால், அவர் அவர்களுக்கு எதிராக கல்தேயரின் மன்னனைப் படையெடுத்து வரச் செய்தார். அவன் அவர்களின் திருஉறைவிடமாகிய ஆண்டவரின் இல்லத்தில் அவர்களின் இளம் வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினான்: இளைஞர் கன்னியர் என்றோ, முதியோர் இளைஞர் என்றோ, எவர்மேலும் இரக்கம் காட்டாமல், எல்லாரையும் அவன் கையில் ஆண்டவர் ஒப்புவித்தார்.