1
பின்னர், நாட்டுமக்கள் யோசியாவின் மகனான யோவகாசை அவருக்குப் பதிலாக எருசலேமில் அரசனாக்கினர்.
2
யோவகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபத்து மூன்று: அவன் எருசலேமில் மூன்றே மாதங்கள் ஆட்சி செய்தான்.
3
எகிப்திய மன்னன் அவனை எருசலேமில் பதவியிலிருந்து நீக்கியபின், நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், நாற்பது கிலோகிராம் பொன்னும் கப்பமாகச் செலுத்துமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
4
எகிப்திய மன்னன் யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம் என்று பெயர்மாற்றம் செய்து, அவனை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான்: பின்பு நெக்கோ, யோவகாசை எகிப்துக்கு இட்டுச் சென்றான்.
5
யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
6
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான்.
7
அத்துடன், ஆண்டவரின் இல்லத்துப் பாத்திரங்கள் சிலவற்றை நெபுகத்னேசர் பாபிலோனுக்கு எடுத்துச் சென்று, அங்கேயுள்ள தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான்.
8
யோயாக்கீமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும், அவனுக்கு எதிராய்க் காணப்பட்டவை யாவும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அவனுக்குப்பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.