30
பின்னர், அரசர் ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார், அவருடன் யூதா, எருசலேம் மக்கள் யாவரும், அனைத்து குருக்களும் லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லா மக்களும் சென்றனர். அரசரும், ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த உடன்படிக்கை நூல் முழுவதையும் அவர்கள் எல்லாரும் கேட்கும்படி வாசித்தார்.
31
பின்பு, அரசர் தம் இடத்தில் நின்றுகொண்டு, ஆண்டவரின் கட்டளையையும் சான்றுகளையும் ஒழுங்குமுளைகளையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார்.
32
அவர் எருசலேமிலும் பென்யமினிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு பணித்தார்: எருசலேம் வாழ் மக்கள் யாவரும் தங்கள் மூதாதையரின் கடவுளாம் இந்தக் கடவுளின் உடன்படிக்கையின்படியே வாழ்ந்தனர்.
33
பின்னர், யோசியா இஸ்ரயேலரின் எல்லா அருவருப்புகளையும் அவர்களுக்குரிய நாடு முழுவதிலுமிருந்தும் அகற்றினார்: இஸ்ரயேலின் இருந்தவர் அனைவரும் அவர்களின் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வழிபடச் செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கத் தவறவேயில்லை.