2நாளாகமம் 33:2-9 - WCV
2
இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவரால் துரத்தியடிக்கப்பட்ட நாடுகளின் அருவருக்கத்தக்க செயல்களைப் பின்பற்றி, அவனும் ஆண்டவரின் பார்வையில் தீமையானதையே செய்தான்.
3
ஏனெனில் அவன் தன் தந்தை எசேக்கியா உடைத்தெறிந்த பலிபீடங்களை மீண்டும் கட்டியெழுப்பினான்: பாகால்களுக்குப் பலிபீடங்களையும், அசேராக் கம்பங்களையும் நிறுவி, வான்படைகளைப் பணிந்து தொழுதான்.
4
‘எனது பெயர் எருசலேமில் என்றென்றும் விளங்கும் ‘ என்று சொன்ன ஆண்டவரின் இல்லத்தில் அவன் பலிபீடங்களை எழுப்பினான்.
5
ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.
6
பென்இன்னோம் பள்ளத்தாக்கில் அவன் தன் புதல்வரை நெருப்பில் சுட்டெரித்துப் பலியாக்கினான்: சகுனம் பார்த்து, குறிகேட்டு, பில்லி சூனியங்களைக் கடைப்பிடித்து, மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் புகலிடமளித்து, ஆண்டவரின் திருமுன் மிகவும் தீமையானதைச் செய்து அவருக்குச் சினத்தை உண்டாக்கினான்.
7
கடவுள் தாவீதிடமும் அவர் மகன் சாலமோனிடமும்,‘இஸ்ரயேலின் குலங்களில் நான் தேர்ந்தெடுத்துள்ள எருசலேமில் இருக்கும் இந்தக் கோவிலில் எனது பெயரை என்றென்றும் நிலைபெறச் செய்வேன் ‘ என்றும்,
8
‘மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இஸ்ரயேலர் சரியாய்க் கடைபிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன் ‘ என்றும் கூறியிருந்தார்: அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான்.
9
இஸ்ரயேல் மக்களின் முன்பாக ஆண்டவர் அழித்த நாடுகள் செய்த தீமைகளைவிட யூதாவும், எருசலேம் வாழ் மக்களும் மிகுந்த தீமை செய்யவும் நெறி தவறவும் மனாசே காரணமாயிருந்தான்.