9
இதன்பின், அசீரிய மன்னன் சனகெரிபு இலாக்கிசில் தனது முழுப்படையுடன் முற்றுகையிட்டுக் கொண்டு, யூதா அரசன் எசேக்கியாவிடமும் அங்கு வாழ்ந்த யூதா மக்கள் எல்லாரிடமும் தன் அலுவலர்களை அனுப்பினான்.
10
அவர்கள்,‘அசீரிய மன்னன் சனகெரிபு சொல்வது இதுவே: முற்றுகைக்குட்பட்ட எருசலேமில் நீங்கள் எதை நம்பித் தங்கியிருக்கிறீர்கள்?
11
'தம் கடவுளாம் ஆண்டவர் அசீரிய மன்னனிடமிருந்து நம்மை விடுவிப்பார்' என்று சொல்லி, பசியாலும், தாகத்தாலும் நீங்கள் மடியுமாறு எசேக்கியா உங்களை வழிதவறி நடத்துகிறான் அன்றோ?
12
அவர்தம் தொழுகைமேடுகள், பலிபீடங்கள் அத்தனையும் தகர்த்து விட்டு, ஒரே பலிபீடத்தில் வழிபடவும் தூபமிடவும் வேண்டும் என்று யூதாவுக்கும் எருசலேமுக்கும் கட்டளையிட்டது இந்த எசேக்கியா அன்றோ?
13
மற்ற நாட்டு மக்கள் எல்லாருக்கும் நானும் என் மூதாதையர்களும் செய்ததை நீங்கள் அறியீரோ?
14
என் மூதாதையர் முற்றிலுமாய் அழித்த அந்த நாடுகளின் தெய்வங்களில் ஏதேனும் ஒன்றால், தன்னை வழிபட்டுவந்த ஒருவனை எனது கையிலிருந்து காப்பாற்ற முடிந்ததா? அதே போன்று, உங்கள் கடவுளாலும் உங்களை என்னிடமிருந்து விடுவிக்க இயலாது.
15
ஆதலால், எசேக்கியா இப்படி உங்களை ஏமாற்றவோ வஞ்சிக்கவோ விடாதீர்! அவனை நம்பவேண்டாம்! ஏனெனில், என்னிடமிருந்தோ என் மூதாதையாரிடமிருந்தோ, எந்த நாட்டையும் அரசையும் சார்ந்த தெய்வமும் தன் மக்களைக் காப்பாற்றியதில்லை ‘ என்று கூறினர்.
16
அவன் அலுவலர் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர் தம் அடியார் எசேக்கியாவுக்கும் எதிராக இன்னும் அதிகமாகப் பேசினர்.
17
மேலும் சனகெரிபு, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் பழிப்புரை மடல்களை எழுதினான். அதில் ஆண்டவருக்கு எதிராக,‘மற்ற நாடுகளின் தெய்வங்களால் தங்கள் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை: அதேபோன்று எசேக்கியாவின் கடவுளும் தன் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.
18
சனகெரிபின் அலுவலர்கள் மதில்களின்மேல் இருந்த எருசலேம் மக்களை அச்சுறுத்தி, கலக்கமுறச் செய்து, நகரத்தைக் கைப்பற்றுமாறு அவன் வார்த்தைகளை யூதாவின் மொழியில் உரக்கக் கத்தினர்.
19
அவர்கள் மனித கைகளினால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களின் தெய்வங்களைப்பற்றி இழிவாகப் பேசியதுபோன்று, எருசலேமின் கடவுளுக்கு எதிராகவும் பேசினர்.
20
இதைக்குறித்து அரசர் எசேக்கியாவும் ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயாவும் மன்றாடி, விண்ணை நோக்கிக் கூக்குரலிட்டனர்.
21
அப்பொழுது, ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி, அசீரிய மன்னனின் பாசறையிலிருந்த ஆற்றல்மிகு வீரர் அனைவரையும் அலுவலர்களையும் படைத் தலைவர்களையும் கொன்றழித்தார். அதனால், அசீரிய மன்னன் அவமானப்பட்டுத் தனது நாட்டுக்குக் திரும்பினான். அங்கே அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் நுழைந்தபோது, அவன் சொந்தப் புதல்வரை வாளால் வெட்டி வீழ்த்தினர்.
22
இவ்வாறு அசீரிய மன்னன் சனகெரிபிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் ஆண்டவர் எசேக்கியாவும் எருசலேம் மக்களையும் காப்பாற்றி, அவர்களுக்கு எப்பக்கமும் பாதுகாப்பு அளித்தார்.
23
பலர் ஆண்டவருக்காக எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் அரசர் எசேக்கயாவுக்கு விலைமதிப்பற்ற அன்பளிப்புகளையும் கொண்டு வந்தனர். இதன்பிறகு அவர் எல்லா நாடுகளின் பார்வையில் உயர்ந்தவராக விளங்கினார்.