1
இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாட ஆண்டவரின் இல்லத்திற்கு வருமாறு இஸ்ரயேல், யூதா மக்கள் அனைவருக்கும் ஆள்மூலமும் எப்ராயிம், மனாசே குலத்தாருக்கு மடல் மூலமும் எசேக்கியா அழைப்பு விடுத்தார்.
2
பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதாக அரசரும், எல்லாத் தலைவர்களும், எருசலேமின் மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்.
3
குறிப்பிட்ட காலத்தில் கொண்டாட இயலாததற்குக் காரணம், போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை: மக்களும் எருசலேமில் வந்து கூடவில்லை.
4
அரசருக்கும் மக்கள் சபையார் எல்லாருக்கும் இத்திட்டம் சரியெனப்பட்டது.
5
எருசலேமில் இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாடப் பெயேர்செபாமுதல் தாண்வரை இருந்த இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கும் ஓர் அறிவிப்பை அனுப்ப முடிவு செய்தனர்: ஏனெனில், எழுதியுள்ளபடி மக்கள் பெரும் தொகையினராய் அதனைக் கொண்டாடவில்லை.
6
அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று,‘இஸ்ரயேல் மக்களே! ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்: அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார்.